சிந்தனைக் களம்


இசை, நடன நிகழ்வுகள்

கீழே உள்ள நிகழ்வுகளை "click" பண்ணுவதன் மூலம் அந்நிகழ்வின் விபரங்களை அறியலாம்.

Dec 19, 2020, திருவாசகத்தில் கட்டளைகள்

கலாநிதி நிர்மலேஸ்வரி பிரஷாந்த்

தமிழரி இசை மரபிலே 'கட்டளை' என்பது பாடலின் ஓசையை வரையறுக்கும் ஒரு நுட்பமான அளவுகோலாகும். இந்த அளவுகோல் முறைமையைக் கொண்டு திருவாசகப்பாடல்களை எவ்வெவ்வாறெல்லாம் இசைக்கலாம் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த ஆய்வுரை அமைந்துள்ளது.


கலாநிதி நிர்மலேஸ்வரி அவர்கள் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை சார்ந்த சிரேஷ்ட விரிவுரையாளராவார்.


YouTube: https://youtu.be/RrFtL_YBsPs

Jan 17, 2021, ஈழத்தழத்துத் தமிழரின் இசை மரபு (20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை)

முனைவர் திருமதி சுகன்யாஅரவிந்தன்

இவ்வாய்வுரை ஈழத்தின் இசை வரலாறு சார்ந்தது. ஈழத்தில் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரையிலான இசைவரலாறே இவ்வாய்வில் கவனத்திற்கு இட்டுவரப்படுகிறது.


முனைவர் திருமதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை சார்ந்த முதுநிலை விரிவுரையாளராவார்.


YouTube: https://youtu.be/jo_NQb2rF0k

Feb 13, 2021, சுந்தரர் தேவாரங்களில் செந்துருத்திப் பண்


முனைவர் திருமதி ஶ்ரீநாகபூஷணி அரங்கராஜ்

தமிழர் இசைமரபில் பாரம்பரியமாக வழங்கிவரும் பண்களில் ஒன்று செந்துருத்தி. இப்பண் சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரங்களிலே பயின்றுள்ள முறைமையை விளக்கியுரைப்பதாக இவ்வாய்வுரை அமைகிறது. மேற்படி செந்துருத்திப் பண்ணானது கர்நாடக இசையின் இராக மரபிலே மத்தியமாவதி என வழங்கப்பட்டு வருவதாகும்.


முனைவர் திருமதி ஶ்ரீநாகபூஷணி அரங்கராஜ் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை சார்ந்த பண்ணிசை முதுநிலை விரிவுரையாளராவார்.


YouTube: https://youtu.be/ZhGWflvx5ts

Mar 13, 2021, பரதக்கலை: தோற்றம் - தொடர்ச்சி - வளர்ச்சி

ஶ்ரீமதி அன்னபூர்ணா முரளி

இவ்வாய்வுரை, பரதக்கலையின் வரலாறு பற்றிய ஒரு தொகுநிலைப் பார்வையாகும். இவ்வுரையிலே அக்கலையின் தோற்றம் முதல் இன்றுவரையிலான வரலாறும் வளர்ச்சியும் பல்வேறு காலகட்டங்களாக வகைப்படுத்தி நோக்கப்பட்டுள்ளன. செய்முறை விளக்கங்களையும் உள்ளடக்கியதாக இவ்வுரை அமைந்துள்ளது.


ஶ்ரீமதி அன்னபூர்ணா சென்னையிலுள்ள நித்யபூர்ணா பரதநாட்டியப் பள்ளியின் நிறுவனர் ஆவார். சென்னை கலாக்ஷேத்ராவின் முதுகலைப் பட்டதாரியான இவர் துபாயிலும் சென்னையிலும் பல மாணவர்களுக்குக் கற்பித்து அரங்கேற்றங்களை நிகழ்த்தியவருமாவார்.


YouTube: https://youtu.be/tXa2fof_zic

Apr 10, 2021, கர்நாடக இசை மரபில் மனோதர்ம நெறிமுறைகள்

சங்கீத வித்வான் தனதேவி மித்ரதேவா

பாடகரொருவர் தாம் பாடத்திட்டங்களில் பயின்ற அம்சங்களுக்கு மேலாக தமது சுய இசை ஆளுமையை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் நிலையில் அவ்விசை முறைமையானது கர்நாடக இசை மரபிலே மனோதர்ம சங்கீதம் எனப்படும். இவ்வாறான மனோதர்ம சங்கீத நெறிமுறைகளை விளக்கிப்பேசும் முயற்சியாகவே இந்த ஆய்வுரை அமைந்துள்ளது.


புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞரான சங்கீத வித்வான் தனதேவி மித்ரதேவா அவர்கள் சங்கீத கலாநிதி பேராசிரியர் T. N. கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர் M. S. அனந்தராமன் ஆகியோரிடம் வயலினிசை பயின்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் தற்பொழுது கனடாவில் சுருதி லயா நுண்கலை அகடமி என்ற அமைப்பை நிறுவி இசைப்பணியாற்றிவருகிறார்.


YouTube: https://youtu.be/F8aNFI757pM

May 9, 2021, கர்நாடக இசைமரபில் தாளம்

மிருதங்க கலாவித்தகர், லயகலா குலநிதி ஶ்ரீகுகேந்திரன் கனகேந்திரம், MFA

கர்நாடக இசைமரபில் தாளத்திற்குரிய முக்கியத்துவத்தினை விளக்கியுரைக்கும் ஆய்வான இது செயன்முறை விளக்கங்களுடன் அமைந்ததாகும்.


கனடாவிலுள்ள கலைக்கோவில் நுண்கலை அகடமியின் ஸ்தாபகரும் இயக்குநருமான ஶ்ரீகுகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் ஶ்ரீ K. கண்ணதாசன் மற்றும் கலைமாமணி Dr. திருவாரூர் ஶ்ரீபக்தவத்ஸலம் ஆகியோரின் மாணவராவார். கிருஷ்ணவேணி மயில்வாகனம் அவர்களிடம் புல்லாங்குழலிசையையும் பயின்றுள்ளார்.


YouTube: https://youtu.be/bhAfl5pG4H0

June 12, 2021, கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை

கலாநிதி சியாமளாங்கி கருணாகரன்

இராக ஆலாபனை என்பது மனோதர்ம இசையின் ஒரு முக்கிய செயன்முறையாகும். இச்செயன்முறை பற்றிய படிமுறை விளக்கங்களுடன் அமைந்த ஆய்வு இது.


ஈழத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான A. K.கருணாகரன் அவர்களின் புதல்வியாரா கலாநிதி சியாமளாங்கி கருணாகரன் அவர்கள் இலங்கையின் கிழக்குப்பல்கலைக்கழகத்திலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருபவராவார்.


YouTube: https://youtu.be/jXpJ0XtIh8g

July 10, 2021, நடனமரபில் ரஸக்கோட்பாடுகள்

பேராசிரியர் சே.இரகுராமன்

ரஸம் என்ற வட சொல் தமிழில் சுவை என்ப்பொருள் தருவதாகும். உள்ளத்துணர்வுகள் உடல் மொழியூடாகக் குறிப்பாக முக பாவங்களினூடாக வெளிப்படும் நிலையே ரஸம் எனப்படுகிறது. அவ்வகையில் இது நடனக்கலைமரபு சார்ந்ததாகும். இவ்வாறான வெளிப்பாட்டு முறைமைகள் பற்றிய கோட்பாடே ரஸக்கோட்பாடு எனப்படுகிறது. இந்த ரஸக்கோட்பாடு பற்றிய விளக்கமாக அமைந்த ஆய்வுக்கட்டுரை இது. வடமொழியின் பரத சாஸ்த்திரம் மற்றும் தமிழின் சங்கப்பாடல்கள் மற்றும் தொல்காப்பிய இலக்கணம் ஆகியவற்றை மையப்படுத்திய ஒர் ஒப்பியல் ஆய்வாக இது அமைந்துள்ளது.


சென்னை A. M. ஜெயின் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தவராபேராசிரியர் ரகுராமன் அவர்கள் தமிழரின் இசைநடன மரபுகளில் ஆழ்ந்த புலமை கொண்டவராவார். தமிழர் நடன வரலாறு, நடனக் கலைச்சொல் களஞ்சியம் ஆகிய பல நூல்களின் ஆசிரியரான இவர் 400க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களை வடிவமைத்தவருமாவார். தற்பொழுது இவர் சென்னை கலாக்ஷேத்ராவில் வருகைதரு பேராசிரியராகத் திகழ்ந்து வருகிறார்.


YouTube: https://youtu.be/p1euwcYrMNw

Aug 14, 2021, மனோதர்ம இசையில் கற்பனாஸ்வரம்

கலைமாமணி Dr. M. லலிதா - கலைமாமணி M. நந்தினி

இவ்வாய்வுரை மனோதர்ம இசையின் ஒரு கூறான கற்பனாஸ்வரம் பற்றியதாகும். கற்பனா ஸ்வரம் என்பது பாடகரின் ஸ்வர ஞானம் சார்ந்த செயன்முறையாகும். குறிப்பாக ஸ்வரக்கோர்வைகளை இராக பாவங்களுக்கும் தாளங்களுக்கும் ஏற்ற வகையில் பொருத்தமுற இணைத்து வெளிப்படுத்தும் திறனையே இது சுட்டி நிற்கிறது. இவ்வாறான செயன்முறைத்திறன் சார்ந்த பயிற்சிகள் பற்றிய விளக்கமாக இவர்களின் இவ்வுரை அமைந்துள்ளது.


உடன் பிறந்தவர்களான இவ்விருவரும் தாய் வழியிலும் தந்தை வழியிலும் நீண்ட இசைப்பாரம்பரியம் கொண்டவர்களாவர். அத்துடன் இசைத்துறையில் உயரிய பட்டங்களையும் அனைத்துலக நிலையிலான பல கௌரவங்களையும் பெற்றவர்களுமாக இவர்கள் திகழ்கிறார்கள். உலகநாடுகள் சார்ந்த தமது செயற்பாடுகளில் கலப்பிசை (Fusion Music) என்ற செயன்முறையை இவர்கள் முன்னெடுது வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய செய்தியாகும்.


YouTube: https://youtu.be/D0IBoYJb4R8

Sept 11, 2021, பரதக்கலை: மரபுகளும் மாற்றங்களும்

நாட்டிய கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர்

இவ்வாய்வுரை பரதக்கலை மரபானது நாட்டியநாடகங்களினூடாக எய்திவரும் மாற்றங்கள் பற்றியதாகும். திருமதி கார்த்திகா கணேசர் அவர்கள் தாம் தயாரித்து மேடையேற்றிய நாட்டிய நாடகங்களில் சூழ்நிலைகளுக்கேற்ப மேற்கொண்ட மாற்றங்களை மையப்படுத்தியே இவ்வுரையை நிகழ்த்தியுள்ளார்கள்.

ஈழத்தவரான கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள் தமிழகத்தின் வழுவூர் ராமையா பிள்ளையிடம் குருகுலவாசமாக நடனம் பயின்றவர். காலந்தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு முதலிய நூல்களின் ஆசிரியர். இலங்கையில் கொழும்பில் கார்த்திகா நடனப்பள்ளியை நிறுவி நடனப்பணியாற்றிவந்த இவர் தற்பொழுது தாம் வாழும் நாடான அவுஸ்ரேலியாவிலும் அப்பெயரினாலான நடனப்பள்ளியை நிறுவி அப்பணியைத் தொடர்கிறார்.


YouTube: https://youtu.be/iDpLDPs5Az8

Oct 9, 2021, ராக வைபவம்

கலைமாமணி விதுஷி பூஷணி கல்யாணராமன்

இவ்வாய்வுரையானது கர்நாடக இசை மரபில் உள்ள முக்கிய இராகங்கள் பலவற்றை அவற்றின் தனித்தன்மைகள் புலப்படும் வண்ணம் செவிக்கினிய வகையில் செயன்முறை விளக்கங்களுடன் எடுத்துரைப்பதாக அமைந்ததாகும்.


கர்நாடக இசையுலகில் முக்கிய கலைஞராகத் திகழும் ஈழத்தவரான ஶ்ரீமதி பூஷணி கல்யாணராமன் அவர்கள் இலங்கை யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பின்னர் தமிழகம் சென்று தமது இசை ஆளுமையை மேலும் வளர்த்துக்கொண்டதன் மூலம் கர்நாடக இசைமரபின் முதல் வரிசைக் கலைஞராகவும் உலகறிந்த இசையாளராகவும் திகழ்ந்து வருகிறார்.


YouTube: https://youtu.be/ClY5vAkftzs

Nov 14, 2021, சென்னை வளர்த்த இசை

பேராசிரியை வே. வெ. மீனாட்சி ஜெயக்குமார்

கர்நாடக இசை மரபானது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வளர்ந்து வந்த முறைமைபற்றிய ஒரு வரலாற்றுப்பார்வையாக அமையும் ஆய்வுரை இது. சென்னைக்கும் இசைக்கும் ஆரம்பகாலமுதலே இருந்துவந்த தொடர்புகள், அங்கு இசை காலூன்றி வளர்வதற்குக் காரணமாக அமைந்த சூழல்கள், அங்கு இசை சார்ந்து பிற்காலத்தில் உருவான நிறுவனங்கள் மற்றும் அங்கிருந்த இசை ஆளுமைகள் முதலான பல்வேறு தகவல்களும் இவ்வாய்வுரையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


பேராசிரியை மீனாட்சி ஜெயக்குமார் அவர்கள் சென்னையிலுள்ள தமிழிசைச் சங்கத்தில் அமைந்துள்ள தமிழிசைக் கல்லூரியின் முதல்வராகப்பணியாற்றி வருபவர். வீணை இசையில் சிறப்புப் பெற்ற இவர் இசையுடன் நடனம் மற்றும் நாடகத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவராவார். இவர் இசைக்கேள்வி பதில் களஞ்சியம் 1008 என்னும் நூலை எழுதியவர்.


YouTube: https://youtu.be/pbg46nYO74E

Dec 12, 2021, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக மேடை வளர்த்த இசை

முனைவர் அரிமளம் சு. பத்மநாபன்

இவ்வாய்வுரையானது நாடக மேடைகளூடாக இசை வளர்ந்த வரலாற்றைப் பற்றியதாகும். அவ்வகையில் குறிப்பாக தமிழ் நாடக முன்னோடிகளில் ஒருவரான சங்கரதாஸ் சுவாமிகள் அவர்கள் தமது நாடகச் செயற்பாடுகளூடாக ஆற்றிய இசைப்பங்களிப்புகள் பற்றிய உரையாக இது அமைந்துள்ளது.


முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்கள் இசையியல் அறிஞரும் இசைக்கலைஞரும் நாடகத் தமிழ் ஆராய்ச்சியாளருமாவார். வானொலி, தொலைக்காட்சிகளில் பல நிகழ்வுகளை நடத்தியவர். சொற்பொழிவாளர். சென்னை மியூசிக் அகடெமியின் சிறந்த இசைச்சொற்பொழிவிற்கான விருதி உட்பட பல விருதுகளைப் பெற்றவர். பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


YouTube: https://youtu.be/Rw-zV07pL74

Jan 15, 2022, சிறப்பு நிகழ்ச்சி

சிந்தனைக் களம்(இசை-நடனம்) என்ற அமைப்பினூடாகக் க டந்த ஒருவருடகாலமாக நிகழ்த்தப்பட்டு வந்துள்ள உரைகளின் தொடர்ச்சியாக 15 ஜனவரி 2022 அன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வு இது.


வித்வான் ஆச்சாரியார் ஸ்ரீ நெய்வேலி R. சந்தான கோபாலன் அவர்கள் சிந்தனைக்களத்தின் கடந்தகால நிகழ்வுகள் பற்றியும் தொடர்ந்து மேற்கொள்ளப் படவேண்டிய நிகழ்வுகளின் தேவைகள் தொடர்பாகவும் சிறப்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் சு.பசுபதி, சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி, யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் மற்றும் வைத்தியகலாநிதி இராமநாதன் இலம்போதரன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.


அதனைத் தொடர்ந்து ’விதுஷி’ பூஷணி கல்யாணராமன் அவர்களுடைய அரங்கிசை நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் வயலின் இசைக்கலைஞர் பக்கல இராமதாஸ், மிருதங்க வித்வான் ஏ.எஸ்.இரங்கநாதன், மோர்சிங் கலைஞர் ஏ.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் அனுசரணைக் கலைஞர்களாகப் பங்காற்றினர்.


YouTube:

Part 1: https://youtu.be/kCIPXwHUT9w

Part 2: https://youtu.be/EnfuHR_ferk

Feb 13 2022, மாணவர்கள் நிகழ்வு - கனடா

சிந்தனைக்களம் (இசை-நடனம்) என்ற அமைப்பின் இரண்டாவது வருடத்துக்குரிய முதல் நிகழ்ச்சி மாணவர்களை மையப்படுத்தி அமைந்ததாகும்.


கனடாவில் இசைப்பணியாற்றி வரும் ”சங்கீத பூஷணம்” ஸ்ரீமதி கமலாதேவி சண்முகலிங்கம் அவர்களின் மாணவர்களான செல்வி அனுஜா இந்திரகுமார், செல்வன் நிராகுலன் புவனேந்திரா, செல்வி வித்யா விஜயகுமார் ஆகியோர் 'பண்ணிசை மரபில் பஞ்சபுராணம் பாடும் நெறி முறைகள்’ என்னும் தலைப்பில் உரையாற்றினர். இம்மாணவர்கள் மூவரும் கனடாவில் பிறந்து வளர்ந்தவர்களாவர்.


YouTube: https://youtu.be/R7UR3XgnSJQ

Mar 13 2022, பாஞ்சாலி சபதம் என்னும் முத்தமிழ்க் காப்பியம்

பேராசிரியர் பசுபதி

சிந்தனைக்களத்தின் 15ஆவது உரையானது ‘பாஞ்சாலிசபதம் என்னும் முத்தமிழ்க் காப்பியம்’ என்னும் தலைப்பில் கனடாவில் பணியாற்றிவரும் பேராசிரியர் சு.பசுபதியவர்களால் நிகழ்த்தப்பட்டது.

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டை நினைவுறுத்தும் வகையிலமைந்ததான இந்நிகழ்வானது பெண்விடுதலையுணர்வைச் சிறப்பிக்கும் வகையிலும் அமைந்ததாகும்.

YouTube: https://youtu.be/HmCjFp_WIaY

Apr 10 2022, பரதக்கலையில் நாயகியர்

டாக்டர் ராதிகா வைரவேலவன்

சிந்தனைக்களத்தின் 16 ஆவது உரைத்தொடரானது நடனத்துறை சார்ந்த தாகும். ‘பரதக்கலையில் நாயகியர்’ என்னும் தலைப்பில் சென்னையிலிருந்து உரையாற்றியவர் டாக்டர் ராதிகா வைரவேலவன் அவர்களாவர் (Director, Chathur Lakshana Academy of Fine Arts)


பாட்டுடைத்தலைவியரான நாயகியரின் மனப்பாங்குகள் வெளிப்படுத்தப் படும் முறைமைகள் பற்றிய இவ்வுரையானது "நாட்டியசாஸ்திரம்", "ரஸமஞ்சரி" ஆகிய நூல்களை மையப்படுத்தி அமைந்ததாகும்.

YouTube: https://youtu.be/PsQn5K4_UV4

May 15 2022, செவ்வியலிசை - பாரதிகள் ஐவர்

ஸ்ரீ அசோக் சுப்ரமணியம்

சிந்தனைகளத்தின் 17ஆவது உரையானது கலிபோர்னியாவில் வாழ்ந்து இசைப்பணியாற்றி வரும் இசைக்கலைஞர் ஸ்ரீ அசோக் சுப்பிரமணியம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

‘செவ்வியலிசை - பாரதிகள் ஐவர்’ என்னும் தலைப்பிலே செயன்முறை விளக்கங்களுடன் அமைந்த இவ்வுரையானது கவிகுஞ்சரபாரதி, சுத்தானந்தபாரதி, கோபாலகிருஷ்ண பாரதி, மழவை சிதம்பரபாரதி மற்றும் சுப்பிரமணிய பாரதியார் ஆகிய ஐவரின் பாடல்களின் சிறப்பம்சங்கள் பற்றியதாகும்.

YouTube: https://youtu.be/kuYezY1wXek

Jun 12 2022, உணர்வெழுச்சிகளும் ரஸபாவங்களும்

ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துரு, செல்வி ஐஸ்வரியா சந்துரு

சிந்தனக் களத்தின் 18 ஆவது உரையானது கனடாவில் "கலை மன்றம் நுண்கலைக் கல்லூரி" (Kalai Manram Academy of Fine Arts & Yaga, Inc.) என்ற அமைப்பின் இயக்குநராகத் திகழும் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துரு மற்றும் அவரின் புத்திரியும் மாணவியுமான குமாரி ஐஸ்வரியா சந்துரு ஆகியோரால் நிகழ்த்தப் பட்டது.

"உணர்வெழுச்சிகளும் ரஸ பாவங்களும்" என்னும் தலைப்பில் அமைந்த இவ்வுரையானது ‘ரஸ பாவங்களை மாணவர்களின் ஆளுமைத் திறன்கள் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்குதலோடு தொடர்பு படுத்திக் கற்பிக்கும் முறைமை’ சார்ந்ததாகும்.

YouTube: https://youtu.be/c-defpjJCps

Jul 10 2022, ஸ்வரங்களின் உறவுமுறைகளும் இராகங்களின் உருவாக்க நிலைகளும்

திருமதி ஹம்சத்வனி பிரசாந் குருக்கள்

சிந்தனைக்களத்தின் 19ஆவது உரையானது இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் போதனாசிரியராகத் திகழும் திருமதி ஹம்சத்வனி பிரசாந்த் குருக்கள் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

"ஸ்வரங்களின் உறவுமுறைகளும் இராகங்களின் உருவாக்க நிலைகளும்" என்னும் தலைப்பில் அமைந்த இவ்வுரையானது வாதி, சம்வாதி, விவாதி மற்றும் அனுவாதி ஆகிய ஸ்வரங்களிலிருந்து இராகங்கள் உருவாகும் முறைமைகள் பற்றியும் அவ்விராகங்களிலிருந்து பல்வேறு ஜன்ய இராகங்கள் பிறப்பெடுக்கும் முறைமைகள் பற்றியுமான எடுத்துரைப்பாகும்.

YouTube: https://youtu.be/L9nZU2JgMj0